வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை - TPV30
திருப்பாவையின் 30-வது பாசுரம்
இந்த முப்பது பாடல்களையும் பாடுவோர் அடையும் பேரின்பம்
சுருட்டி ராகம், ஆதி தாளம்
இப்பாசுரம் ஆண்டாள் (கோபியர் வாயிலாக அல்லாது) நேரடியாகப் பாடுவது போல் அமைந்தது. சூடிக் கொடுத்த நாச்சியாரின் பிரபந்தம் சாற்றுமுறை நிலைக்கு வருகிறது. திருப்பாவை நிறைவு அடையும் இத்தினம் ஒரு புண்ணிய தினமாகும். இப்பாசுரத்தில் ஆண்டாள் தரும் செய்தி அடியார்கள் அனைவருக்கும் மோட்ச வழி காட்டும் ஒளி விளக்காக அமைகிறது !
வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை*
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி*
அங்கப் பறை கொண்ட ஆற்றை* அணி புதுவைப்-
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன*
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே*
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரைத்தோள்*
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்*
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
பொருளுரை:
அழகிய கப்பல்கள் உலாவும் திருப்பாற்கடலை, மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி என்ற அரவத்தை கயிறாக்கிக் கடைந்த பரமமூர்த்தி, கேசவன் (அழகிய சுருண்ட நீள்முடி கொண்டவன்) மற்றும் மாதவன் (திருமகளின் கணவன்) என்று திருநாமங்களைக் கொண்டவன். சந்திரனை ஒத்த அழகிய முகத்தை உடைய, அழகிய ஆபரணங்களை அணிந்த, இடைச் சிறுமியர், அப்பிரானை அடைந்து திருவடி பணிந்து, அவனது சன்னிதியில், தாங்கள் வேண்டிய பறையைப் (தங்கள் புருஷார்த்தத்தைப்) பெற்ற அந்த செய்தியை விளக்கி,
அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் திரு அவதரித்தவளும், அன்றலர்ந்த தாமரை மலரால் ஆகியகுளிர்ந்த மாலையை அணிந்த பட்டர்பிரானின் (பெரியாழ்வார்) திருமகளும், ஆன கோதை நாச்சியார், அருளிச் செய்த சங்கத் தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாசுரங்களை, குறையில்லாமல் ஓதும் அடியார்களுக்கு
நான்கு பெருமலைகளை ஒத்த திருத்தோள்களையும், சிவந்த திருக்கண்களையும், அழகிய திருமுகத்தையும் கொண்ட, அனைத்துச் செல்வங்களுக்கு அதிபதியான திருமால், இம்மையிலும், மறுமையிலும் கருணை காட்டி, (அவன் சேர்க்கையால்) பேரானந்தத்தை அருளுவான் !
பாசுரங்கள் 30 - ஒரு பார்வை:
முதல் பாசுரத்தில், நோன்புக்கான நேரம், நோன்புக்கான மூலப்பொருள் (கிருஷ்ணன்) குறித்தும்,
2-வது பாசுரத்தில், நோன்பின்போது செய்யத் தகாதவை பற்றியும்,
3-வது பாசுரத்தில், நோன்பினால் விளையும் நன்மைகள் குறித்தும்,
4-வது பாசுரத்தில், மழைக்காக வருணனை வேண்டியும்,
5-வது பாசுரத்தில், நோன்புக்கு ஏற்படக் கூடிய தடைகளை கண்ணனே நீக்க வல்லவன் என்று போற்றியும்,
6-வது பாசுரத்திலிருந்து 15-வது பாசுரம் வரையில், கோகுலத்தில் வாழும் கோபியரை, உறக்கம் விட்டெழுந்து, கண்ணனைத் தரிசித்து வணங்கச் செல்லும் அடியார் கூட்டத்தோடுச் சேருமாறு விண்ணப்பித்தும்,
16-வது பாசுரத்தில், நந்தகோபர் மாளிகையில் உள்ள துவார பாலகரை எழுப்பி, உள் செல்ல அனுமதி வேண்டியும்,
17-வது பாசுரத்தில், நந்தகோபர், யசோதா பிராட்டி, கண்ணபிரான், பலராமன் என்று நால்வரையும் விழித்தெழுமாறு வரிசையாக விண்ணப்பித்தும்,
18-வது பாசுரத்தில், நப்பின்னை பிராட்டியை மிக்க மரியாதையுடன் விழித்தெழ வேண்டியும்,
19-வது மற்றும் 20-வது பாசுரங்களில், நப்பின்னை, கண்ணன் என்று, ஒரு சேர, இருவரையும் உறக்கம் விட்டு எழுமாறு விண்ணப்பித்தும்,
21-வது மற்றும் 22-வது பாசுரங்களில், (கோபியர்) கண்ணனின் கல்யாண குணங்களைப் போற்றியும், தங்கள் அபிமான பங்க நிலைமையை ஒப்புக் கொண்டும், கண்ணனின் அருட்கடாட்சத்தை மட்டுமே (தங்கள் சாபங்கள் ஒழிய) நம்பி வந்திருப்பதையும்,
23-வது பாசுரத்தில், கிருஷ்ண சிம்மத்தை அவனுக்கான சிம்மாசனத்தில் அமர வேண்டியும்,
24-வது பாசுரத்தில், அம்மாயப்பிரானுக்கு மங்களாசாசனம் செய்தும் (திருப்பல்லாண்டு பாடிப் போற்றியும்),
25-வது பாசுரத்தில், (கோபியர்) தங்களை ரட்சித்து அரவணைக்க அவனைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று உணர்த்தியும்,
26-வது பாசுரத்தில், நோன்புக்கான பொருள்களை கண்ணனிடம் யாசித்தும்,
27-வது பாசுரத்தில், பாவை நோன்பு முடிந்ததும், (கோபியர்) தாங்கள் வேண்டும் பரிசுகளை பட்டியலிட்டும்,
28-வது பாசுரத்தில், (கோபியர்) தங்களது தாழ்மை, கண்ணனின் மேன்மை, அவனுடனான பிரிக்க முடியாத உறவு, தங்களது பாவ பலன்களை நீக்கக் கோருதல் ஆகியவை பற்றியும்,
29-வது பாசுரத்தில், எந்நாளும் பிரியாதிருந்து கண்னனுக்கு கைங்கர்யம் செய்வதற்கு அருள வேண்டியும்,
30-வது பாசுரத்தில், திருப்பாவை சொல்லும் அடியார்கள் கண்ணபிரானின் அன்புக்கும், அருளுக்கும் பாத்திரமாகி, பேரானந்தம் அடைவர் என்ற செய்தியை வெளியிட்டும்
30 அற்புதமான பாசுரங்கள் வாயிலாக, முதற்பாடலிலிருந்து இறுதிப் பாசுரம் வரை, தொடர்ச்சியும் ஓட்டமும் பங்கப்படா வகையில், கோதை நாச்சியார், ஒரு கிருஷ்ண காவியத்தையே படைத்துள்ளார் ! இனிய எளிய தமிழில் வேத சாரத்தை உள்ளர்த்தங்களில் வெளிப்படுத்தும் திருப்பாவை, 'கோத உபநிடதம்' என்று போற்றப்படுகிறது !
பாசுரச் சிறப்பு 1:
1. இங்கே "வங்கக் கடல் கடைந்த"வனை 'மாதவன்' என்று ஆண்டாள் அழைக்கக் காரணம், அவரது ஆச்சார்யனும், தந்தையும் ஆன பெரியாழ்வாரின் உபதேசத்தை மனதில் வைத்தே என்று ஒரு கருத்துண்டு, அதாவது, பெரியாழ்வார் பாடியது போல, "மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்பதோர் தெய்வத்தை நாட்டி" ! மேலும், மாதவன் என்பதற்கு பிராட்டியோடு கூடி இருப்பவன் என்று பொருள் இருப்பதால், திருப்பாற்கடலைக் கடைந்து அப்போது தோன்றிய திருமகளை தன் திருமார்பில் தரித்துக் கொண்ட அம்மாயப்பிரானை 'மாதவன்' என்றழைப்பது பொருத்தமாகிறது !
2. 'கேசவன்' என்ற திருநாமம் பரமனது பரத்துவத்தை உணர்த்துகிறது. கேசவனில் உள்ள 'க' சப்தம் பிரம்மனையும், 'சவன்' ஈஸ்வரனையும் குறிக்கின்றன. அதாவது, பிரம்மனும், சிவனும் திருமாலுக்குள் அடக்கம் என்பதைச் சொல்கிறது.
3. "வங்கக்கடல் கடைந்த" என்ற திருச்செயல், அடியார் மேல் பரமனுக்குள்ள வாத்சல்யத்தையும், பரமனது எங்கும் வியாபித்திருக்கும் நிலையையும் உள்ளர்த்தமாக கொண்டிருப்பதாக பெரியோர் கூறுவர்.
4. 'பட்டர்பிரான் கோதை சொன்ன' என்று அறிவிப்பதன் மூலம், தன் தந்தையே தன் ஆச்சார்யன் என்பதை உணர்த்துகிறார், சூடிக் கொடுத்த நாச்சியார் ! மதுரகவியாழ்வாரும், "தென்குருகூர் நம்பிக்கு அன்பானை மதுரகவி சொன்ன சொல்" என்று பாடியே, கண்ணிநுண் சிறுத்தாம்பை நிறைவு செய்துள்ளார். ஆகையால், ஆண்டாளின் திருப்பாவையும், மதுரகவியின் கண்ணிநுண் சிறுத்தாம்பும் ஆச்சார்யனை முன்னிறுத்தியதால், தனிச்சிறப்பு பெற்ற பிரபந்தங்களாகக் கருதப்படுகின்றன.
5. செங்கண் - பரமனின் திருக்கண்களானது, திவ்யப்பிரபந்தத்தில் பல இடங்களில் சுட்டப்பட்டுள்ளன ! அவை அழகும் வசீகரமும் கொண்டதோடன்றி, பரமனின் அருட் கடாட்சத்தை அடியார்களிடம் செலுத்தும் திரு அவயங்களாக அறியப்படுகின்றன ! ஆழ்வார்கள் பரந்தாமனின் திருக்கண்கள் மேல் பெருங்காதல் கொண்டவர்கள் !!! ஆண்டாளும், கண்ணனது கருணை பொழியும் கண்களை, திருப்பாவையில்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்* பங்கயக் கண்ணானை
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்* அங்கண் இரண்டும்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
என்று 5 இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
6. "கோவிந்தா" என்ற திருநாமம் திருப்பாவையில் மூன்று முறை (கூடாரை வெல்லும், கறவைகள் பின்சென்று, சிற்றஞ்சிறுகாலே வந்துன்னை என்று 3 பாசுரங்களில்) குறிப்பிடப்பட்டிருப்பது போல,
"நாராயணா" என்ற திருநாமமும்
மார்கழித் திங்கள் மதி நிறைந்த - "நாராயணனே நமக்கு பறை தருவான்" என்றும்
கீசுகீசென்று ஆனைச்சாத்தன் கலந்து - "நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்" என்றும்
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் - "நாற்றத் துழாய் முடி நாராயணன்" என்றும்
மூன்று முறை வருகின்றன !
7. செல்வத் திருமால் - பரமன் ஆன ஸ்ரீநிவாசன், அளவிட முடியாத ஐசுவர்யங்களையும், அடியார்கள் பால் பேரன்பும், கருணையும் உடையவன், த்வய மந்த்ரத்தின் பூர்வப் பகுதியின் 'ஸ்ரீமத்' சப்தம் 'மாதவன்' என்று வரும் பாசுரத்தின் முதலடியிலும், உத்தரப் பகுதியினுடையது 'செல்வத் திருமால்' என்று வரும் கடைசி அடியிலும் வெளிப்படுவது சிறப்பு !
8. 'எங்கும் திருவருள் பெற்று" என்பது இம்மையிலும், மறுமையிலும் அவன் திருவருளை வேண்டுவதைக் குறிக்கிறது.
பாசுரச் சிறப்பு 2:
பரமன் வங்கக்கடலை கடைந்தது தேவர்களுக்கு அமுதம் எடுத்துத் தர மட்டுமல்ல, தனக்குரியவளான திருமகளையும் மீட்டெடுத்து தன் திருமார்பில் தரித்துக் கொள்ளவும் தான் :-) கருணை மாதாவான திருவை பரமன் தன் இதயத்திற்கு அருகில் வைத்துக் கொண்டதால், அடியவர்க்கும் நல்லது தான்.
பிராட்டியின் நெருக்கத்தால், பரமன் நமது குறைகளையும், பாவங்களையும் எளிதில் மன்னித்து விடுகிறான் ! தனக்குரிய அடியவரையும் (அவர் சிறியரோ பெரியரோ!) தனதாக்கிக் கொள்ளும் வல்லமை மிக்கவன் அம்மாயன்.
ஆண்டாள் அன்றே, "விஷ்ணுசித்தரின் மகள் பாடிய திருப்பாவைப் பாசுரங்களைப் பாடி, நோன்பு அனுசரிப்பவர்களுக்கு, செல்வத் திருமாலின் திருவருள் கிடைத்து, பேரின்ப நிலையைப் பெறுவர்" என்று சொல்லித் தான் திருப்பாவையை நிறைவு செய்தாள்! அவளுக்குக் கிட்டிய பேறு அவள் காலத்திற்குப் பின் வரும் மாந்தர்க்கும் கிட்ட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையிடம் இருந்தது! "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று ஆண்டாள் சொல்லிச் சென்று விட்டாள், திருப்பாவையை ஒரு சிறுமியாக தான் இயற்றியபோதே!
"ஈரிரண்டு மால்வரைத்தோள்" என்று ஆண்டாள் சொன்னதில் ஒரு சுவை இருக்கிறது! அதாவது, திருப்பாவையைத் தப்பாமல் உரைக்கும் அடியவரை, இரு கைகள் போதாது என்று பரந்தாமன் தனது நான்கு கைகளால் அரவணைப்பானாம்! அது போலவே, "திருமுகத்துச் செல்வத்திருமாலால்" என்று சொல்லும்போது, திரு(மகளின்) சம்பந்தத்தாலேயே பரமன் செல்வத் திருமால் ஆகிறான் என்பதை உணர்க! ஆக, திருப்பாவை ஓதும் அடியவர் லட்சுமி கடாட்சம் பெற்று இன்புறுவர்.
ஆண்டாள் ஒரு சாதாரணப் பெண்ணைப் போலவே தன் காதல் வெற்றிக்காக நேர்ந்து கொண்டாள்.
நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையானின்று வந்திவை கொள்ளும் கொலோ
என்று வேண்டுதல் மேற்கொண்டவள் [நாச்சியார் திருமொழியில்] திருவரங்கத்தில் போய் அரங்கனின் கருவறையில் கரைந்து விட்டாள். "நூறு அண்டா வெண்ணையும் நூறு அண்டா சக்கரைப்பொங்கலும்" என்ற அவளது நேர்த்திக் கடனை யார் செலுத்துவது? சில நூற்றாண்டுகள் கழிந்தன.
வைணவம் தழைக்க வந்த எந்தை ராமானுச முனி என்கிற எம்பெருமானார், (ஆண்டாள் தன் வேண்டுதலை நிறைவேற்றியிருப்பாளோ மாட்டாளோ என்ற) நெருடல் தாங்காமல் திருமாலிருஞ்சோலைப் பெருமாளுக்கான கோதையின் நேர்த்திக் கடனை தான் செலுத்தி விட்டு, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சென்றார். அப்போது ஆண்டாளின் அன்புக்குரிய தமையன் ஆனார்! அதனால் தான் இன்றும், ஆண்டாளுக்கு வாழி சொல்லும்போது "பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே" என்கிறோம்!
இவ்வாறாக, அப்பரமனையே தனது உடைமையாக்கிக் கொண்டு, உரிமையை என்றைக்குமாகத் தக்க வைத்துக்கொண்ட சூடிக் கொடுத்த சுடர்கொடியின் திருப்பாவைப் பாசுரங்களில் காணப்படும் கடலை ஒத்த பேரன்பும், பிரவாகமாக பெருக்கெடுக்கும் பக்தி ரசமும், கவிதை நயமும், அழகியல் உணர்வும் தனித்துவமானவை.
ஒரு தெய்வப் பெண்ணின் காலத்தினால் அழியாத தமிழ்ப் புலமைக்கும், கவித்துவத்திற்கும் நாம் தரும் மரியாதைக்கும் கௌரவத்திற்கும் இன்றளவும் சாட்சிகளாக, வருடாவருடம் நடக்கும் திருவில்லிபுத்தூர் உத்சவமும், தைலக்காப்பும், பிரியாவிடை சேவையும் விளங்குகின்றன என்றால் அது மிகையில்லை!
திருப்பாவை முடிவுரை:
இந்த பாசுரத்துடன் திருப்பாவை நிறைவுக்கு வருகிறது. நம்மால் முடியுமா என்று சந்தேகத்துடன் தான் இந்த மார்கழி மாதம், திருப்பாவை விளக்கப் பதிவுகள் எழுதத் தொடங்கினேன். பல பெருந்தகைகளின் உரைகளும், ஆண்டாள், திருப்பாவை பற்றி வாசித்தவையும், கேட்டவையும், எனது திருப்பாவை முயற்சிக்கு பெரும் உதவியாக அமைந்தன.
நான் எழுதியதில், சித்தாந்தம் மற்றும் வைணவ ஆசார்யர் விளக்கங்களுக்கு மாறாக, ஆன்மிக அன்பர்கள் மனம் புண்படும்படியாக, இன்னும் அறியாத வகையிலாக, எதாவது குறைகள் எனது திருப்பாவைப் பதிவுகளில் நலிந்தும் வலிந்தும் ஏற்பட்டிருக்குமேயானால், மன்னிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். சுட்டினால், அவற்றைத் திருத்திக் கொள்கிறேன்.
இந்த மார்கழியில், திருப்பாவை சொன்னவர்கள், கேட்டவர்கள், வாசித்தவர்கள், எழுதியவர்கள் என்று எல்லோருக்கும் கோதை நாச்சியாரின் திருவருளும், அவள் உகந்த கண்ணபிரானின் திருவருளும் பரிபூர்ணமாக கிடைக்கட்டும். அது போலவே, அனைவரும் எல்லா செல்வங்களையும் பெற்று, பெருவாழ்வு வாழ ஆண்டாளைப் பிரார்த்திக்கிறேன்.
திருப்பாவை சிறப்பு:
ஆண்டாளைப் பற்றியும், அவள் பாடிய திருப்பாவையின் சிறப்பு பற்றி அவளை வாழ்த்திய வாழ்த்துரையும் பிற்காலத்தில் ஆன்றோர்களால் இயற்றப்பட்டு இன்றும் பாடப்பட்டு வருகின்றன.
வேதப்பிரான் பட்டர் அருளியவை
கோதை பிறந்தவூர் கோவிந்தன வாழுமூர்
சோதி மணிமாடம் தோன்றுமூர் - நீதியால்
நல்ல பத்தர் வாழுமூர் நான்மறைகளோ துமூர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர்.
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும் - கோதைதமிழ்
ஐயைந்தும் மைந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.
ஸ்ரீ மணவாளமாமுனிகள் தன்னுடைய உபதேச ரத்தினமாலையில் ஆண்டாளை இவ்வாறு புகழ்கிறார்
இன்றோ திருவாடிப்பூர மெமக்காக
அன்றோவிங் காண்டா ளவதரித்தாள் - குன்றாத
வாழ்வாக வைகுந்த வான்போகந் தன்னையிகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய். (22)
ஆடிமாதம் பூர நக்சத்திரம் இன்றுதானோ எங்களுக்காக என்று என்னும்படி
குறையாத வாழ்வு உண்டாகும்படியாக ஸ்ரீவைகுண்டத்திலுள்ள
உயர்ந்த அநுபவத்தை அளித்து, பெரியாழ்வார்க்கு திருமகளாக
இவ்வுலகத்தில் ஆண்டாள் அவதரித்தாள்.
பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை - ஒருநாளைக்
குண்டோமனமே யுணர்ந்துபார் ஆண்டாளுக்
குண்டாகி லொப்பிதற்கு முண்டு (23)
பெரியாழ்வாருடைய மகளாகிய ஆண்டாள் பிறந்த
ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் வைபவம் வேறெரு தினத்திற்கு
உண்டோமனமே உணர்ந்துப்பார். ஆண்டாளுக்கு
ஒப்பு ஆண்டாளே.
அஞ்சு குடிக்கொரு(*) சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய் - பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பக்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து (24)
ஐந்து ஆழ்வார்களுக்கும் சந்ததியாய் அவர்களுடைய
செயலை விஞ்சும் அளவிற்கு இளைமையிலிருந்தே
பக்குவமான ஆண்டாளை பக்தியுடன் எப்போது
மகிழ்ச்சியாக துதிப்பாயாக.
(*)அஞ்சு குடி - 1. முதல் ஆழ்வார்கள் ( பொய்கையாழ்வார், பூததாழ்வார், பேயாழ்வார்), 2. திருமழிசை
ஆழ்வார், 3. நம்மாழ்வார், 4. குலசேகர ஆழ்வார், 5. பெரியாழ்வார் - ஆகிய ஐந்து ஆழ்வார்களை குறிக்கிறது.
தேசிகன் பிரபந்தம் - ஸ்ரீ வேதாந்த தேசிகன் அருளியவை
வேயர்புகழ் வில்லிபுத்தூர் ராடிப்பூரம்
மேன்மேலும் மிகவிளங்க விட்டுசித்தன்
தூயதிரு மகளாய் வந்த ரங்கனார்க்குத்
தூழாய்மாலை முடிசூடித் கொடுத்த மாதே!
நேயமுடன் திருப்பாவை பாட்டாறந்தும்
நீயுரைத்த தையொரு திங்கட்பாமாலை
ஆயபுகழ் நூற்றுநாற்பத்து மூன்றும்
அன்புடனே யடியேனுக்குகருள் செய்நீயே
வாழி திருநாமம்:
திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே.
சூடிக் கொடுத்த நாச்சியார் திருவடிகளே சரணம் !
ஆசார்யர் திருவடிகளே சரணம்
ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீமதே நாராயணாய நம:
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து:
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 284 ***